டிரெண்டிங்

புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

webteam

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எனது சொந்த பின்னணி விவரங்களை புதுச்சேரி பாஜக கட்சி பெற்று அதன் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆதார் அட்டைக்காக கொடுத்த விவரங்கள் எப்படி அரசியல் கட்சிக்கு சென்றது. இது தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே அது குறித்து புலன் விசாரணை நடத்தவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், “குறுந்தகவல் மூலம் பரப்புரை மேற்கொள்ள பாஜக தரப்பில் முன்அனுமதி பெறப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சைபர் க்ரைம் போலீசார் அறிக்கை வெளியிட்டப்பிறகு, அது குறித்தான முடிவு எடுக்கப்படும். அதற்கு சிறிது கால அவகாசம் தேவை.” என குறிப்பிட்டது.

அதனைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, அப்படியானால் விசாரணை முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை விசாரணையின் முடிவில் வெளியிடப்படும் அறிக்கையின் படி முடிவெடுக்கப்படும். அந்த முடிவு தகுதி நீக்கம் தொடர்பான முடிவாக இருக்கலாம்” என்று கூறியது

அதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதி, ஆதார் ஆவணங்கள் எப்படி அரசியல் கட்சிக்கு சென்றது என்பது தொடர்பான விசாரணையை ஆதார் ஆணையமும் நடத்த வேண்டும் என்று கூறி மார்ச் 31 தேதிக்கு ஒத்திவைத்தார்.