டிரெண்டிங்

“திருவாரூர் தொகுதி வேட்பாளர் நானா?” ஸ்டாலின் சூசகம்

“திருவாரூர் தொகுதி வேட்பாளர் நானா?” ஸ்டாலின் சூசகம்

rajakannan

திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் தொடங்கி‌யது. விருப்ப மனு அளிக்கும் நிகழ்வை, ‌அதிமுக தலைமை அலுவலகத்தில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், திருவாரூரில் இடைத்தேர்தலை சந்திக்க திமுக தயாராகி விட்டதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். 

திருவாரூரில் நீங்கள் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “4ம் தேதி மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் திமுக வேட்பாளர் யார் என்பது தெரிவிக்கப்படும். நானா, துரைமுருகனா, டி.ஆர்.பாலுவா என்பது அப்போது தெரியவரும்” என்றார்.

மேலும், “திருவாரூரில் மட்டும் தேர்தல் அறிவித்ததில் சூட்சமம் உள்ளது. மத்திய, மாநில அரசு, தேர்தல் ஆணையம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செயல்படுகின்றனர். 18 தொகுதிக்கு தேர்தல் நடத்த முன்வராமல் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்த காரணம் என்ன?. எப்படி இருப்பினும் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது” என்று அவர் கூறினார்.