மேற்குவங்கம், புதுச்சேரி, ஒடிசா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பாஜக தலைவர்கள் தேர்வாகியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி பாஜக தலைவராக வி.சாமிநாதனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டு முதல் இவர், அந்த பொறுப்பில் இருக்கிறார். அதேபோல போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கிய திலீப் கோஷ்க்கு மீண்டும் மேற்குவங்க மாநில பாஜக தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
(மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ்)
ஒடிசா மாநிலத்தில் பாஜக தலைவராக சமிர் மொஹந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 61 வயதான மொஹந்தி, 2016-ஆம் ஆண்டு முதல், ஒடிசா மாநில பாஜகவின் துணைத்தலைவராக பொறுப்பு வகித்தவர். உத்தரகாண்ட் மாநிலத்தில் பன்ஷிதார் பகத், மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தின் கலதுங்கி சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவான அவருக்கு வயது 65.
தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநரான பின், தமிழக பாஜக தலைவர் யார் என முடிவெடுக்கப்படாமல் இருந்தது. தலைவர் பதவி தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், தமிழக பாஜகவின் தலைவர் யார் என இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இறுதி பட்டியலில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பெயர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.