தமிழகத்தின் 234 தொகுதிகளில் கடந்த 9 மாதங்களாக ஒரு தொகுதி மட்டும் காலியாகவே இருந்து வருகிறது. அது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்ற, ஆர்.கே.நகர் தொகுதி. அங்கு தேர்தல் நடைபெறும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அந்த தொகுதி மக்கள்.
ஆர்.கே.நகர் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்டுக்கொருமுறை தேர்தல் திருவிழாவை சந்திப்பது அங்குள்ள மக்களுக்கு அண்மைக்கால வழக்கமாகியிருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டபோது ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அங்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார் ஜெயலலிதா. 2016 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும், அதே தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சரானார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், 2016 டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவரது மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே, அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, பன்னீர்செல்வம் வெளியேறியிருந்தார். அங்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட சில நாள்களிலேயே, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தை அணுகினர். அதைத்தொடர்ந்து, அதிமுக எனும் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் மார்ச் 23 ஆம் தேதி அறிவித்தது.
இதனால், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன் இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்திலும் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரம் களைகட்டியிருந்த நேரத்தில், இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக ஏப்ரல் 10 ஆம் தேதி அறிவித்தது தேர்தல் ஆணையம். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலரது வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின் அடிப்படையிலும், அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதோடு, ஆர்.கே.நகர் தொகுதியில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் இல்லை எனவும், பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவித்தது. மேலும், மத்திய அரசின் ஆலோசனை பெற்று ஓராண்டுக்குள் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமெனவும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
ஆனால் அங்கு தேர்தலை நடத்த உகந்த சூழல் இதுவரை எழவில்லை எனக்கூறி, மத்திய அரசுக்கு கடந்த ஜூன் 2 ஆம் தேதி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. பஞ்சாப், கேரளா மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 11 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிப்பு வெளியான நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து இன்னமும் பரிசீலித்து வருவதாகவே கூறி வருகிறது தேர்தல் ஆணையம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நடத்துவதற்கான உகந்த சூழல் விரைவில் ஏற்படுமென நம்பிக்கையோடு காத்திருப்பது தேர்தல் ஆணையம் மட்டுமல்ல. தொகுதி மக்களும்தான்.!