அறிவியல் உலகில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. அதற்குத் தகுந்தாற்போல் புதிய புதிய செயலிகளும் உருவாக்கப்பட்டு இன்றைய தலைமுறையினரை இணையதளங்களுக்குள்ளேயே கட்டி வைத்திருக்கின்றன. அதில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி உள்ளது. இது, பல பயனர்களைக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் பல பரிமாற்ற தகவல்களும் நடைபெற்று வரும் நிலையில், பயனர்களுக்கு ஏதுவாக அவ்வப்போது புதிய அம்சங்களையும் கூடுதலாய்ச் சேர்த்து வருகிறது.
இந்த நிலையில், ’இனி ஒரே வாட்ஸ்அப் கணக்கை நான்கு மொபைல்களில் பயன்படுத்தலாம்’ என அந்நிறுவனத்தின் மூலம் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே 2 மொபைல்களில் ஒரேநேரத்தில் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துவதற்கு வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஓர் எண்ணில் உள்ள வாட்ஸ்அப் கணக்கை, இனி 4 மொபைல்களில் பயன்படுத்தலாம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, அந்நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை ஒரேநேரத்தில் 4 சாதனங்களில் இணைத்து பயன்பெற முடியும் என்கிற அப்டேட்டை சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.