டிரெண்டிங்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 'நாம் தமிழர்' கட்சி ஏற்படுத்தக்கூடிய தாக்கம் எத்தகையது?

Veeramani

தமிழகம் முழுவதும் பரவலாக இளைஞர்களின் வாக்குவங்கியை வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சி, இந்த சட்டமன்ற தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை உருவாக்கும்?

கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் இருமுனைப் போட்டி என்பதுதான் எப்போதும் பழக்கமானது. சில தேர்தல்களில் மட்டும் வலுவான மூன்றாவது அணி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒருமுறை கூட தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத மூன்றாவது அணியால் வெற்றிபெற முடியவில்லை. மூன்றாவது அணி என்பது எப்போதும், இந்த முக்கியமான இரு கட்சிகளில், ஒரு கட்சியின் வெற்றியை பாதிக்கவே பயன்பட்டிருக்கிறது.

உதாரணமாக, 2006-இல் மூன்றாவது அணியாக போட்டியிட்ட தேமுதிகவால், அதிமுக வெற்றிவாய்ப்பை இழந்தது. 2016-இல் உருவாக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி திமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்தது. அதுபோல வரும் 2021 தேர்தலில் திமுக, அதிமுக அணிக்கு போட்டியாக நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்தனியாக களம் காணுகின்றன. இதில், நாம் தமிழர் கட்சியானது தற்போதைய தேர்தலில் எதுபோன்ற தாக்கத்தை உருவாக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி கடந்துவந்த அரசியல் பாதை:

2009 இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு பின்னர் உருவாக்கப்பட்டது நாம் தமிழர் கட்சி, 2010 முதல் அரசியல் கட்சியாக செயல்பட்டாலும் 2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தல்களில் இக்கட்சி போட்டியிடவில்லை. ஆனால் இந்தத் தேர்தல்களில் ஈழப்பிரச்னையை முன்வைத்து காங்கிரஸ் - திமுக அணியை எதிர்த்து அதிமுக அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது.

நாம் தமிழர் கட்சி முதன்முதலாக தேர்தல் களம் கண்டது 2016 சட்டமன்ற தேர்தல்தான். அந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நலக்கூட்டணிக்கு அடுத்ததாக நான்காவது அணியாக களம் கண்டது இக்கட்சி. இந்தத் தேர்தலில் பாஜகவும் தனித்தே களம் கண்டது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் உயிருடன் இருந்தபோதே அவர்களை எதிர்த்து தனது அரசியலை தொடங்கினார் சீமான். மிகக் கடுமையான போட்டியை சந்தித்த 2016 சட்டமன்ற தேர்தலில் 134 இடங்களில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தது. 89 இடங்களில் வென்ற திமுக பல தொகுதிகளில் நூலிழையில் வெற்றியை தவறவிட்டது. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே கெளரவமான வாக்கு சதவீதத்தை பெற்றது நாம் தமிழர் கட்சி. 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி 4,58,104 வாக்குகளைப் பெற்று 1.07% வாக்கு சதவீதத்தை பெற்றது.

2016 தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் வாக்கு வித்தியாசம் ஆயிரம் ஓட்டுகளுக்கும் கீழே இருந்தது; சுமார் 10 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 2000 வாக்குகளுக்குள் இருந்தது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 41 சதவீதம், திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 40%. இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒரு சதவீத வாக்குகள்தான் இந்தத் தேர்தலில் அதிமுகவை அரியணையில் அமர்த்தியது. 2016 தேர்தலுக்கு பிறகு நடந்த அத்தனை இடைத்தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை வாங்கி வருகிறது நாம் தமிழர் கட்சி.

2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையும் தனித்தே சந்தித்தது நாம் தமிழர் கட்சி. ஆனால் இவருக்கு போட்டியாக தினகரன் மற்றும் கமல் ஆகியோரும் அதிமுக, திமுகவை எதிர்த்து தனித்தனியாக களம் கண்டனர். இந்தத் தேர்தலில் திமுக அணி 38 தொகுதிகளில் வென்றது, அதிமுக ஒரு இடத்தில் வென்றது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுகவுக்கு அடுத்ததாக நான்காவது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி 16,47,185 வாக்குகளுடன் 3.89 சதவீத வாக்குகளை பெற்றது. 2019-இல் நடந்த 22  சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் 3.15 சதவீத வாக்குகளை இக்கட்சி பெற்றது. அதன்பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியதால் வரும் 2021 தேர்தலில் உற்சாகத்துடன் களப்பணியாற்றுகிறது சீமானின் படை.

 2021 தேர்தலில் நாம் தமிழரின் வியூகம் என்ன?

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் சீமான், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி, ஆண்களுக்கு 117 தொகுதிகளையும், பெண்களுக்கு 117 தொகுதிகளையும் வழங்கியிருக்கிறது இக்கட்சி. வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிக்கணக்கை தொடங்கிவிட வேண்டும் என்ற வேகத்தில், பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார் சீமான்.

அதிமுக – திமுக வுக்கு மாற்று நாங்கள்தான் என்றபடி மார்தட்டி சொல்லும் சீமான், அதிகளவில் பிரிப்பது திமுகவுக்கான வாக்குகளைத்தான். இவரது கட்சியில் அதிகளவிலான இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளதால், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களிலும் வலுவாக உள்ளது நாம் தமிழர் கட்சி. தமிழ்த் தேசியம், சுற்றுச்சூழல், தமிழர் உரிமை சிக்கல்களில் அழுத்தமான குரல் கொடுப்பதால் சீமானுக்கு நிலையான வாக்கு வங்கி உருவாகியிருப்பது உண்மை. ஆனால், அது சில தொகுதிகளில் வெற்றிபெறும் அளவுக்கு மாற்றத்தை உருவாக்குமா என்பதை சீமானின் வியூகங்களும், மக்களின் மனநிலையுமே முடிவு செய்யும்.

- வீரமணி சுந்தரசோழன்