"இளைஞர்களுக்கு பயிற்சி மையங்கள் அமைத்து தரப்படும்; டிஎன்பிஎஸ்சி குரூப்-2, ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்காக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கோச்சிங் சென்டர்கள் அமைத்து தரப்படும்; தாராபுரம் பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் கொண்டுவரப்படும்" என்று தாராபுரம் தொகுதியில் மக்களுக்கு வாக்குறுதிகள் அளித்து, அந்தத் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எல்.முருகன் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
> தாராபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஈரோடு - பழனி சாம்ராஜ் ரயில்வே திட்டம் உறுதியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
> திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் 4 வழிச்சாலையின்போது மாற்றப்பட்ட அமராவதி அணையின் சிலை மீண்டும் அதே இடத்திற்கு பிரமாண்டமாக நிறுவப்படும்.
> கைவிடப்பட்ட கொளத்துப்பாளையம் நூற்பாலையை மீண்டும் புதுப்பித்து தொழில் தொடங்கப்படும்.
> தாராபுரம் நகர் வழியாக பழனி, சபரிமலை, வேளாங்கண்ணி ஆகிய ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாற செல்ல மண்டபம் அமைக்கப்படும்.
> தாராபுரம் நகரின் தூய்மைக்காக பாதாள சாக்கடை திட்டம் அமைத்து தரப்படும்.
>தாராபுரம் நகர் மற்றும் வட்டார மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அமராவதி அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும்.
> தாராபுரம் அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப்படும்.
> மூலனூர் பகுதிகளில் ஆடுகள் வளர்ப்பு அதிக அளவில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆடுகளை வெட்டி பதப்படுத்த தொழிற்சாலை அமைத்து தரப்படும்.
> தாராபுரம் மூலனூர் கன்னிவாடி பகுதிகளில் உள்ள விவசாயிகள் செங்காந்தள் மலரை பெரும் அளவில் பயிரிட்டு வருகிறார்கள். இதனை விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்யும் வகையில் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
> தாராபுரம் பகுதியில் பெருமளவில் உற்பத்தி ஆகும் வெங்காயம் மற்றும் சிறு குறு பயிர்களை சேமித்து வைக்க குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும்.
> மூலனூர் பகுதியில் பெருமளவில் முருங்கை பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க முழங்கையில் இருந்து முருங்கை இலையில் இருந்தும் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும்.
> தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கி பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
> விதைகள் உற்பத்தியில் தென்னகத்தில் முதலிடம் வகிக்கும் தாராபுரம் தானிய உற்பத்தியை பெருக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
> இளைஞர்களுக்கு பயிற்சி மையங்கள் அமைத்து தரப்படும். டிஎன்பிஎஸ்சி குரூப்-2, ஐஏஎஸ் போன்ற தேர்வுகளுக்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கோச்சிங் சென்டர் அமைத்து தரப்படும். தாராபுரம் பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் கொண்டுவரப்படும்.
> தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தத்தெடுத்து அரசுப் பள்ளியின் தரத்தை முன்னாள் மாணவர்களோடு இணைந்து உயர்த்தப்படும்.