டிரெண்டிங்

உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க 5 காரணங்கள் என்ன? - விரிவான அலசல்

உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க 5 காரணங்கள் என்ன? - விரிவான அலசல்

Veeramani

விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் என உத்தரப் பிரதேச அரசியலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக சுழன்று அடித்த சூறவாளிகளை மீறி, மீண்டும் அறுதி பெரும்பான்மையுடன் அந்த கட்சி ஆட்சியை பிடித்திருக்கிறது. அதற்கு முக்கியமாக ஐந்து காரணங்கள் கூறப்படுகின்றன.

முதல் காரணம், எதிர்க்கட்சிகளுக்கு முன்னதாகவே தேர்தல் பரப்புரையை பாரதிய ஜனதா தொடங்கியது தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். கொரோனா சமயத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தபோதே, இதற்கான காய்களை பாரதிய ஜனதா நகர்த்திவிட்டதாக கூறுகின்றனர். குறிப்பாக வீடு, வீடாக சென்று பரப்புரை மேற்கொண்டது பாரதிய ஜனதாவுக்கு கை மேல் பலன் கொடுத்துள்ளது.



அடுத்ததாக, குற்றவாளிகளை ஒடுக்குவதில் யோகி ஆதித்யநாத் அரசு காட்டிய வேகம். மனித உரிமை மீறல் பற்றிய விமர்சனங்களை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், சமூக விரோத கும்பலை அழித்து, ரவுடிகளையும் என்கவுன்ட்டரில் ஒடுக்கியது, யோகி ஆதித்யநாத் அரசு மீது மக்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்ததால், குறிப்பாக பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்கள் வெகுவாக குறைந்தது ஆதித்யநாத் ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

மூன்றாவதாக முழு முடக்க சமயத்தில் வாழ்வாதாரத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் மக்கள் தவித்த நிலையில், மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தை ஆதித்யநாத் அரசு தீவிரமாக செயல்படுத்தியதும், கேம் சேஞ்சராக பார்க்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதும் பாரதிய ஜனதா ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்வு செய்ய காரணமாகியுள்ளது.



கடைசியாக பாரதிய ஜனதாவின் இந்துத்துவா பாணியும் உத்தரப் பிரதேச தேர்தலில் வெகுவாக கைகொடுத்துள்ளது. அதிலும், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான அஸ்திவாரம் போடப்பட்டது, காசி விஸ்வநாதர் ஆலயத்தை புனரமைத்தது என பாரதிய ஜனதா மீதான நம்பிக்கை வாக்காளர்கள் மத்தியில் அடுக்கடுக்காக அதிகரிக்க காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஆட்சியை பூர்த்தி செய்த முதல்வர் மீண்டும் வெல்வது முதல்முறை:

இந்திய அரசியலின் மையப்புள்ளியாக திகழும் மாநிலம் உத்தரப்பிரதேசம். இங்குள்ள அதிகளவிலான சட்டப்பேரவை, மக்களவை தொகுதிகளே இதற்கு காரணம். முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநிலத்தில் பாரதிய ஜனதா தொடர்ச்சியாக பெற்றுள்ள 2ஆவது வெற்றி நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் கடும் சவால், ஹத்ராஸ், லக்கிம்பூர் கேரி, உன்னாவ் போன்ற இடங்களில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள், பொதுவாக மக்கள் மத்தியில் நிலவும் ஆட்சிக்கு எதிரான மன நிலை என பல தடைக்கற்களை மீறி இத்தேர்தலில் வெற்றிக்கனியை பறித்துள்ளது பாஜக.



உத்தரப்பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்ததை தங்கள் பெரும் சாதனையாக கூறி பரப்புரை செய்தது பாஜக. மேலும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பிய சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களும் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் திரும்பப் பெறப்பட்டது போன்ற அம்சங்கள் பாரதிய ஜனதா வெற்றிக்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேச வரலாற்றில் 5 ஆண்டு ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்த முதலமைச்சர் ஒருவர் தொடர்ச்சியாக அடுத்த தேர்தலிலும் வெல்வது இதுவே முதல்முறை. மேலும் இம்மாநிலத்தில் கடந்த 37 ஆண்டுகளில் முதலமைச்சர் ஒருவர் தொடர்ந்து 2ஆவது முறையாக ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளதும் இதுவே முதல்முறை. பாரதிய ஜனதாவின் இவ்வெற்றியில் பல சிறப்புகள் இருந்தாலும் முந்தைய தேர்தலில் வென்ற 312 இடங்களை வெல்ல முடியாதது இந்த முறை வெற்றியின் வீச்சை குறைத்துள்ளது என்றே கூற வேண்டும்.



சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரிந்து களமிறங்கியதும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. யோகியின் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சமூக நல்லிணக்கமின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரப்புரை செய்த சமாஜ்வாதி கட்சி 32 சதவிகித வாக்குகளை பெற்றதுடன் கடந்த முறையை விட இம்முறை 2 மடங்குக்கு அதிகமான இடங்களை வென்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. உத்தரப்பிரதேச வெற்றியை 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் தொடர பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.பாஜகவின் வெற்றி நடையை தடுக்க எதிர்க்கட்சிகள் வகுக்கப்போகும் வியூகங்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தேசிய அரசியல் களத்தில் அனல் பறக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம்.