டிரெண்டிங்

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெறியாட்டம் - 12 பேர் உயிரிழப்பு

rajakannan

உள்ளாட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக மேற்குவங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மாலை 5 மணி வரை 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பில்கண்ட் பகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்வாஸை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கத்தியால் குத்தினர். முர்ஷிதாபாத்தில் இரு தரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டு வாக்கு பெட்டிகள் ஒரு குளத்தில் தூக்கி வீசப்பட்டன. இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. 

கூச்பீகார் பகுதியில் மேற்கு வங்க அமைச்சர் ரபீந்திரநாத் கோஷ், பாரதிய ஜனதா ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குல்தாலி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஆரிஃப் காஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். பிர்பாரா பகுதியில் வாக்குச்சாவடி கைப்பற்றும் சம்பவத்தை படம் பிடிக்க முயன்ற 5 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். சில இடங்களில் வாக்குச் சாவடிகளும் ஆளும் கட்சியினரால் சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது. 

உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.