டிரெண்டிங்

“கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க தர்ணா போராட்டம்” - மம்தா அதிரடி அறிவிப்பு

“கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க தர்ணா போராட்டம்” - மம்தா அதிரடி அறிவிப்பு

rajakannan

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமரும் அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு, சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்றார். மேலும், கொல்கத்தா மேயர், மாநில டிஜிபி உள்ளிட்டோரும் உடனடியாக வந்தனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மம்தா பானர்ஜி எல்லோரிடமும் ஆலோசனை நடத்தினார்.

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய பின்னர் முதல் மம்தா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பிரதமர் மோடியின் அரசு மேற்கு வங்கத்தில் அராஜகத்தை பரப்புகிறது; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமரும் அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளனர். உலகத்திலேயே சிறந்த போலீஸ் அதிகாரி கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார்தான். நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தை அழிக்க பாஜக சித்ரவதை செய்கிறது. 

அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. எந்தவித தகவலும் அளிக்காமல், கொல்கத்தா காவல் ஆணையர் இல்லத்திற்கு வந்துள்ளனர். அவர்களை கைது செய்திருக்க முடியும், ஆனால், அப்படி செய்யவில்லை. விட்டுவிட்டோம். 

இது கூட்டாட்சி அமைப்பு தத்துவத்தின் அழிவு இது. கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க இன்று முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். மேட்ரோ சேனல் பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெறும். நாளைய சட்டசபை நடவடிக்கைகள் கூட்டம் நடைபெறும் இடத்திலே நடைபெறும். தர்ணா போராட்டம் என்றால் சத்தியா கிரஹம்தான்” என்றார்.