மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரிக்கு இடையே உச்சகட்ட மோதல் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் நந்திகிராமுக்கு அடுத்ததாக மேற்குவங்கத்தில் பரபரப்பான தொகுதியாக மாறியிருப்பது சிங்கூர்தான். இதற்கு என்ன காரணம்?
மேற்குவங்கத்தில் முதல்கட்ட தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவும், பிரசாரமும் சூடுபிடித்துள்ளது. மேற்குவங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் பாஜக இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான கட்சியாக இல்லை. ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலிலிருந்து கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜி அவரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை வீழ்த்துவாரா என்ற ஆவலும் ஏற்பட்டிருக்கிறது.
மேற்குவங்கத்தில் உச்சகட்ட எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் மற்றொரு தொகுதி ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூர். இங்கு 2001 முதல் 2016 வரை திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 4 முறை எம்.எல்.ஏவாக இருந்த ரபீந்திரநாத் பட்டாச்சார்யா இந்த முறை பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார்.
இது தொடர்பாக ரபீந்திரநாத் கூறுகையில், “நான் பழிவாங்க வேண்டும், மம்தா என்னை எவ்வளவு மோசமாக நடத்தினார். என்னால் அவரை என்றும் மன்னிக்க முடியாது என சூளுரைத்தார். கடந்த தேர்தலில் சிங்கூர் தொகுதியில் ரபீந்திரநாத் பட்டாச்சார்யாவின் வெற்றிக்காக பாடுபட்ட மன்னா இந்த முறை திரிணாமூல் காங்கிரஸுக்காக களமிறங்குகிறார். அதே நேரத்தில் மன்னாவின் மனைவி அருகில் உள்ள ஹரிபால் தொகுதியில் களம் காண்கிறார்.
2006ம் ஆண்டில் சிங்கூர் தொகுதியில் டாடா நானோவின் ஆலையை அமைப்பதற்காக நில எடுப்பு பணிகள் நடைபெற்றது. 997 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் விளைவாக இடதுசாரி கூட்டணி அரசு 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கே திரும்பியளிக்க உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.