டிரெண்டிங்

ஜெ.வுக்கு காய்ச்சல் என பொய்யாக அறிக்கை தந்தோம்: பிரதாப் ரெட்டி

rajakannan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் இருந்தார் என்றும் மக்கள் அச்சப்படக்கூடாது என்பதற்காகவே அவருக்கு காய்ச்சல் என அறிக்கை தரப்பட்டது எனவும் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள், உறவினர்கள் என பல தரப்பினரும் நீதிபதி முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்கள் அச்சப்படக்கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் என அறிக்கை தரப்பட்டது. சட்டம்- ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது என்பதால்தான் உண்மை நிலையை அறிக்கையில் குறிப்பிடவில்லை. எங்களது மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையத்திடம் இருந்து சம்மன் வந்துள்ளது; எனக்கு வரவில்லை. அவர்கள் முழு முயற்சியை மேற்கொண்டார்கள். 

ஜெயலலிதா மீது நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் வைத்த அன்பால், அவரை நோயில் இருந்து மீட்டுவர பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அனைவரும் முயற்சியால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நோயின் தாக்கத்தால் இறக்கும் நிலை வந்தது. ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை நடந்து வருவதால் வேறு எதும் பேச முடியாது” என்றார்.