அதிமுக அரசு மீதான ஊழல் புகாரில் கடுகளவும் பின்வாங்கமாட்டோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “அதிமுக அரசு மீதான ஊழல் புகாரில் கடுகளவும் பின்வாங்கமாட்டோம். எங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியைக் கைவிட்டு மக்களை அரசு காப்பாற்ற வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தைக் கைவிட்டு கொரோனாவை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
முன்னதாக, சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது. ஜாமீன் அவகாசம் இன்று முடிவடைந்த நிலையில், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாராதி சரணடைந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.