தமிழகத்தில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் ஆகியோரை கடந்து சில வாக்காளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர்கள் குறித்து இங்கு காண்போம்.
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மகேந்திரன். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால்தான் வாக்களிப்பேன் என பல ஆண்டுகளாக பிடிவாதமாக இருந்துள்ளார். அவர் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்ட நிலையில், அண்மையில் திமுகவில் இணைந்த மகேந்திரன், 45-வது வயதில் முதல்முறையாக வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர், பேருந்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு தமது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். பாலக்கோட்டில் இருந்து சேலம் செல்லும் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஸ்ரீதர், பொம்மிடி அருகே தனது வார்டுக்கான வாக்குச்சாவடி வந்ததும் பேருந்தை நிறுத்தியுள்ளார். பயணிகளிடம் 10 நிமிடங்கள் அனுமதி கேட்டுவிட்டு அவர் வாக்களித்தார்.
திண்டுக்கல்லில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற செவிலியர் அம்சா, வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். மாநகராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச்சாவடிக்கு சென்ற அவர், தேர்தல் அலுவலரின் உதவியுடன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகராட்சியின் 13ஆவது வார்டில் 102 வயதான ரங்கநாயகி பாட்டியும், ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியின் 18 ஆவது வார்டில் 100 வயதான டானா என்ற பாட்டியும், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் 13வது வார்டில் மங்கையம்மாள் என்ற 105 வயது பாட்டியும் வாக்களித்தனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் 117 ஆவது வார்டுக்கான வாக்குச்சாவடியில் ரகுநாத் என்ற முதியவர், ஆக்சிஜன் சிலிண்டருடன் வாக்குச்சாவடிக்கு சென்று தமது ஜனநாயக கடமையாற்றி மெய்சிலிர்க்கச் செய்தார்.