டிரெண்டிங்

தேர்தல் ஏற்பாடு: வாக்காளர்கள் கடும் அதிருப்தி

தேர்தல் ஏற்பாடு: வாக்காளர்கள் கடும் அதிருப்தி

webteam

வாக்களிப்பதற்கு ஊருக்குச் செல்ல, போதிய பேருந்து வசதி ஏற்பாடுகளை செய்யாதது, வாக்குப் பதிவு எந்திரங்கள் பழுது போன்ற காரணங்களால் தேர்தல் ஆணையம் மீது வாக்காளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.  இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. 

தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப் பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் வாக்காளர்களுக்கு சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  பல்வேறு தரப்பு மக்களும் சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பது வழக்கம். நேற்று சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்தனர். ஆனால் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்பதால் நீண்ட நேரம் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காத்து கிடக்க வேண்டியுள்ளதாக பயணிகள் புகார் கூறினர்.

பேருந்துகள் இல்லாததை கண்டித்தும் போலீசாரின் அலட்சிய போக்கை கண்டித்தும் பயணிகள் கோஷங்களை எழுப்பியதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இது ஒரு புறம் என்றாலும் இன்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் பூத் ஸ்லிப் கொடுக்காததால், பலர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.