வன விலங்குகள் உலாவும் இடங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளதால் அவ்வப்போது யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட பலவும் மக்கள் இருக்கும் பகுதிக்கு வந்து செல்லும்.
உணவு தேடி வரும்போது மனிதர்கள் அந்த வன விலங்குகளையும், விலங்குகள் மனிதர்களையும் தாக்குவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மேலும் இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வருவது வழக்கம்.
இப்படி இருக்கையில், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் யானைகள் நுழைந்திருக்கின்றன. இரண்டு பெரிய யானைகளும் ஒரு சிறிய யானையும் அடுத்தடுத்து மருத்துவமனை பேசேஜ் வழியாக உள்ளே செல்கின்றன.
இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள் பலரும் ஒரு ஓரமாக நின்றுக் கொண்டு யானைகள் உலாவுவதை செல்ஃபோனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள்.
மருத்துவமனையில் யானைகள் வரும் வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையான கமெண்ட்களாக பதிவிட்டிருந்தாலும், ”இதெல்லாம் வன விலங்குகளின் வீடுகளாக இருந்த காடுகளை அழித்ததன் விளைவாக இருக்கிறது” என ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றனர்.