டிரெண்டிங்

ஸ்மார்ட் வகுப்புக்கு உதவி -அரசுப்பள்ளிக்கு ஹோம் தியேட்டர், ஆன்ட்ராய்டு டிவி வழங்கிய மக்கள்

ஸ்மார்ட் வகுப்புக்கு உதவி -அரசுப்பள்ளிக்கு ஹோம் தியேட்டர், ஆன்ட்ராய்டு டிவி வழங்கிய மக்கள்

kaleelrahman

திருமயம் அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து ஹோம் தியேட்டர், ஆன்ட்ராய்டு டிவி உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்புள்ள தளவாட பொருட்களை வழங்கியுள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நல்லம்பாள் சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.


இந்நிலையில் அந்த பள்ளியை மேம்படுத்த நல்லம்மாள் சமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து கிராம மக்கள் மற்றும் பெற்றோருடன் ஆசிரியர் கழகத்தினரும் ஒன்றிணைந்து நிதி திரட்டினர்.


இதன் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பிற்கு தேவையான ஹோம் தியேட்டருடன் கூடிய ஆன்ட்ராய்டு டிவி உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்புள்ள தளவாட பொருட்கள் மற்றும் மேஜை நாற்காலி வாங்குவதற்காக ரூ. 25 ஆயிரத்திற்கு காசோலையும் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர். அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பை மேம்படுத்த கிராம மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிதி வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.