பத்தாண்டு கால அதிமுக ஆட்சி யாருக்குமே பயனில்லாத ஆட்சி என பரப்புரையில் கனிமொழி எம்பி குற்றச்சாட்டினார். இளைஞர்கள் விவசாயிகள் என யாருக்குமே பயன் இல்லாத ஆட்சி அதிமுக ஆட்சி என்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்பி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜி.வி. மார்க்கண்டேயனை ஆதரித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கரந்தை, கடலையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது...
கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் படித்த இளைஞர்கள் வேலை இன்றி கஷ்டப்படுகின்றனர். விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ தொகுதி பக்கம் வரவில்லை என்பதால் அவர் பெயர் பொதுமக்கள் பலருக்கு தெரியவில்லை.
அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்பில்லை, விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை, இப்பகுதியில் மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதம் அடைந்தன. ஆனால் தமிழக அரசு என்னவென்றும் கேட்கவில்லை நிவாரணமும் வழங்கவில்லை. வறட்சி, மழை, பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு தமிழக அரசு இழப்பீடும் கொடுக்கவில்லை, பயிர் காப்பீடும் சரிவர கிடைக்கவில்லை.
இப்படி யாருக்குமே பயனில்லாத ஒரு ஆட்சி அதிமுக ஆட்சி. ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் சரியாக கொடுக்கப்படுவதில்லை, நியாய விலைக் கடைகளில் கஷ்டப்பட்டு வாங்கினாலும் பொருட்களின் அளவு சரியாக இருப்பதில்லை. ரேஷன் பொருட்களை அந்த துறையைச் சார்ந்த அமைச்சரே வெளி சந்தையில் டன் கணக்கில் விற்பனை செய்து விடுகிறார். பிறகு எப்படி பொதுமக்களுக்கு கிடைக்கும்.
தமிழக அரசில் 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதிலும் வெளிமாநிலத்தவர்களை பணியமர்த்த இங்கு அனுமதித்துள்ளார்கள். அப்படி பணிபுரிபவர்கள் ஹிந்தியில் பேசுகின்றனர். நாம் தமிழில் பேசுகிறோம். நம்ம சொல்வது அவர்களுக்கு புரியாது, அவர் சொல்வது நமக்கு புரியாது.
தமிழகத்தைச் சேர்ந்த நம் குழந்தைகளுக்கு வேலை இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.அது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதேபோன்று அதிக தொழிற்சாலையில் கொண்டுவரப்படும் அதில் 75 சதவீதம் தமிழகத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்கப்படும். ஊதியமாக 300 ரூபாய் வழங்கப்படும் என்றார்.