டிரெண்டிங்

தேனி தொகுதியில் விஜயகாந்த் மகன் - தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்

rajakannan

விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேமுதிக - திமுக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனையடுத்து, தேமுதிக உடனான கூட்டணி உடன்பாட்டினை இறுதி செய்யும் முனைப்பில் அதிமுக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 5 மக்களவை சீட், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்க அதிமுக தரப்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

வடமாவட்டங்களில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாமகவும் கேட்க வாய்ப்புள்ளது. அதனால், எந்தெந்த தொகுதிகள் சாத்தியமாகுமோ அவற்றை வலியுறுத்தி பெறுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டணி குறித்த இறுதி முடிவு இன்னும் ஒரிரு தினங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கூட்டணி எவ்வாறு அமைந்தாலும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.