டிரெண்டிங்

வேலூரை கைப்பற்றியது திமுக : வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

வேலூரை கைப்பற்றியது திமுக : வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

rajakannan

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி உறுதியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

வேலூர் மக்களவைக்கு கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

இந்நிலையில், ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். அதை அடுத்தும் அவர் முன்னிலையில் இருந்தார். நான்கு சுற்று வரை முன்னிலையில் இருந்த சண்முகம் பின்னர் இறங்கு முகமானார்.

பின்னர் இருவரும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னும் பின்னுமாக சென்றுகொண்டிருந்தனர். சிறிது நேரத்தில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். தொடர்ந்து அவர் முன்னிலை பெற்றுக்கொண்டே இருந்தார். இறுதியில் அவர் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். வாக்குகள் எண்ணி முடிக்கும் வரை டி20 கிரிக்கெட் போட்டியைப் போட்டியைப் போல் பரபரப்பு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

இறுதியில், வாக்கு எண்ணிக்கை முடிவில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுகவின் ஏ.சி.சண்முக 4,77,199 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சமி 26,995 வாக்குகள் பெற்றுள்ளார். 

இருப்பினும் இன்னும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.