டிரெண்டிங்

சேறும் சகதியுமாக மாறிய திருமழிசை சந்தை - வியாபாரிகள் வேதனை

webteam

சென்னையில் பெய்து வரும் மழையால் திருமழிசை சந்தை சேறும் சகதியுமாக மாறியுள்ளது எனவும் சந்தையை கோயம்பேடுக்கே மாற்ற வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் திருமழிசை காய்கறி சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகின்றது. மழை நேரங்களில் காய்கறிகளை, இறக்கி வைக்க கூட இடமில்லாமல் வியாபாரிகள் சரக்கு வாகனத்தில் இருந்து விற்பனை செய்து வந்தனர்.

இதனிடையே திருமழிசை காய்கறி சந்தையில் இட வசதி, சேமிப்பு கிடங்கு போன்ற போதிய வசதி இல்லாததால் நாள் தோறும் பல ஆயிரம் டன் காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டு வருவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பெய்த கன மழையால் காய்கறி சந்தையில் காய்கறிகள் நனைந்து டன் கணக்கான காய்கறிகள் அழுகி  குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோயம்பேட்டில் 1000 சதுர அடியில் இருந்து 2000 ஆயிரம் சதுரடி வரை கடைகள் உள்ளது. ஆனால் திருமழிசை காய்கறி சந்தையில் 200 சதுரடியில் கடைகள் உள்ளதால் காய்கறிகளை பாதுக்காக்க முடியாமல் மழை, வெயிலில் காய்ந்து காய்கறிகள் அழுகி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். இதனால் உடனடியாக காய்கறி சந்தையை கோயம்பேட்டிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.