டிரெண்டிங்

‘பாஜகவில் முக்கியத்தும் அளிக்கப்படவில்லை’ மீண்டும் திமுகவில் இணைந்தார் வேதரத்தினம்

‘பாஜகவில் முக்கியத்தும் அளிக்கப்படவில்லை’ மீண்டும் திமுகவில் இணைந்தார் வேதரத்தினம்

webteam

வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

திமுக சார்பில் வேதாரண்யத்தில் போட்டியிட்டு 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டசபைத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றவர் வேதரத்தினம். 2001ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட முத்தரசனையும், 2006ல் தற்போதைய அமைச்சரான ஒ.எஸ். மணியனையும் தோல்வியடைய செய்தவர். 2011ல் திமுக வேதாரண்யத்தில் போட்டியிடாமால் அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு வழங்கியது.

அப்போது சுயேட்சையாக அங்கு வேதரத்தினம் போட்டியிட்டார். இதனால் திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மீண்டும் அவர் 2013ல் திமுகவில் இணைந்தார். பின்னர் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என 2015ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது அங்கும் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறி மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

திமுகவில் வேதரத்தினம் இணைந்தது தொடர்பாக பேசிய அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், “கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எல்லா வகையிலும் பின்தங்கிவிட்ட தமிழகத்தை மீட்டு, தி.மு.க. ஆட்சியை உருவாக்க தேர்தல் களத்தில் இறங்கிப் பணியாற்ற வந்திருப்போரை வரவேற்கிறேன். இது கொரோனா காலமாக இல்லாமல் இருக்குமானால் நானே வேதாரண்யம் வந்திருப்பேன். அல்லது நீங்கள் சென்னைக்கு வந்திருந்தால், மிகச் சிறந்த வரவேற்பை கொடுத்திருப்பேன். வேதரத்தினம் வேறொரு கட்சிக்கு போனார் என்று கூட நான் சொல்ல மாட்டேன். வெளிநாடு போய்விட்டால் நாம் ஒருவரைப் பார்க்க முடியாது அல்லவா ? அதுபோல வெளிநாடு போய்விட்டு இப்போது மீண்டும் கழகத்துக்குள் அவர் வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்” என்றார்.