இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் அரசைவிட மோசமான பாதையில் தற்போதைய பாஜக அரசு செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது அண்மையில் இந்திய கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனவர்களின் உடலில் இருந்து துப்பாக்கி குண்டுகளும் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த குண்டுகள் தங்களுடையது இல்லை என மறுத்த கடலோரக் காவல்படை, பின்னர் இந்த சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கட்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “காங்கிரஸ் அரசு எந்த பாதையில் சென்றதோ அதை விட மோசமான பாதையில் தான் மோடி அரசு சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே சிங்கள அரசுக்கு மோடி அரசு முழுக்க முழுக்க ஆதரவாக இருக்கின்றார்கள். இந்திய அரசு ஈழத்தமிழர்களை காவு கொடுத்துவிட்டது. இந்த ஈழத்தமிழ் உணர்வு வளர்ந்தால், தமிழகத்திலும் அதே உணர்வு தானே வளரும் என்ற நோக்கத்தோடு இருந்த முன்னாள் காங்கிரஸ் அரசு போலத்தான் தற்போதைய பாஜக அரசும் சென்றுகொண்டிருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.