நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடையும் நிலையில், இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் அதிக அளவில் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 12ஆயிரத்து 838 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், திமுக, கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதிமுக இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் குறைந்த அளவிலே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகம் பேர் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.