டிரெண்டிங்

5 மாநிலங்களில் படுதோல்வி: ஜி-23 அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் விரைவில் சந்திப்பு

5 மாநிலங்களில் படுதோல்வி: ஜி-23 அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் விரைவில் சந்திப்பு

Veeramani

5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்துள்ள நிலையில், கிளர்ச்சி காங்கிரஸின் தலைவர்கள் குழு (ஜி-23) அடுத்த 48 மணி நேரத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ், கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் மோசமான தோல்வியை தழுவியுள்ளது.



இந்த சூழலில், தேர்தல் முடிவுகளை சுயபரிசோதனை செய்வதற்காக காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தை விரைவில் கூட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், "5 மாநிலங்களின் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்புக்கு எதிராக வந்துள்ளன, ஆனால் நாங்கள் மக்களின் நம்பிக்கையை  பெறத் தவறிவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இதுகுறித்து  சுயபரிசோதனை செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தை விரைவில் கூட்ட சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்" என்று கூறினார்.

தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும், அதிலிருந்து கட்சி பாடம் கற்றுக்கொள்ளும் என்றும் கூறினார்.



காங்கிரஸின் G-23 முக்கிய தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான நட்சத்திர பிரச்சாரகர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டில், காங்கிரஸின் 23 தலைவர்களைக் கொண்ட குழு (ஜி-23) சோனியா காந்திக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி  உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற வாரியத்திற்கான தேர்தல்கள் உட்பட பல அமைப்பு சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தனர். மேலும் இவர்கள் பல சந்தர்ப்பங்களில் கட்சிக்கு எதிரான பிரச்சினைகளை எழுப்பியது புயலை உருவாக்கியது.