போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதங்கள் விதிக்கப்படுவது சாதாரணமாக எல்லா இடத்திலும் நடப்பதுதான். ஆனால் அந்த அபராதங்கள் வரம்பை மீறி வசூலிக்கப்படுவதால் சாமானிய மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாக நேரிடுவது தொடர்பான செய்திகள் பலவற்றையும் கேள்வியுற்றிருப்போம்.
அந்த வகையில் வெறும் 5000 ரூபாய் சம்பளம் வாங்கும் மின்சார ஊழியரிடம் 6,000 ரூபாய் அபராதம் செலுத்தச் சொல்லி பில் போட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தின் அரங்கேறியிருக்கிறது.
அதன்படி, அம்மாநிலத்தின் ஷாம்லி பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரிடம் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக போக்குவரத்து போலீசார் 6,000 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள். ஆனால் உத்தர பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வோரிடம் 2,000 ரூபாய்தான் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதியுள்ளது.
பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த மெஹ்தாப் என்ற அந்த நபரை மடக்கி டிராஃபிக் போலீசார் அபராதம் விதித்த போது, தன்னுடைய நிலை குறித்தும், இனி இப்படி செய்ய மாட்டேன் என மெஹ்தாப் கூறியும் போலீசார் விடவில்லையாம்.
இதனால் கடுமையான கோபத்துக்கும் வேதனைக்கும் ஆளான மெஹ்தாப், கஸ்பா தானா பவன் காவல்நிலையத்திற்கான மின்சாரத்தை நிறுத்தும் வகையில் மின்கம்பத்தில் ஏறி பவரை கட் செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.