அன்றாட வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக இருக்கும் ஒரே பொருளாக மாறிவிட்டது செல்போன். மனிதனின் மூன்றாம் கையாக இருக்கும் செல்போன் ஒன்று இருந்தால் போதும் எதையும் செய்துவிடலாம் என்ற எண்ணமும் பலரது நினைப்பாகவே இருக்கிறது.
அப்படியான ஒரு பொருளில் நாம் பயன்படுத்தும் கழிவறையை காட்டிலும் அதிகமான பாக்டீரியா இருக்கிறது என்றுக் கூறினால் உங்களுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? ஆனால் கழிவறையை விட அதிகமான பாக்டீரியா செல்போனில் இருப்பதாக அமெரிக்காவின் பிரபல அரிஸோனா பல்கலைக்கழகத்தின் ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.
அதன்படி வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டை காட்டிலும் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பாக்டீரியா நாம் பயன்படுத்தும் செல்போனில் இருப்பதாகவும், கிட்டத்தட்ட 17 ஆயிரம் பாக்டீரியாக்கள் இளைஞர்கள் பயன்படுத்தும் செல்போன்களில் இருப்பதாகவும், இது கழிவறையில் இருக்கும் பாக்டீரியாவை விட பத்து மடங்கு அதிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவிய காலத்தின்போது கை, கால்களை காய்கறிகளை சுத்தமாக கழுவும் செயல்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தன. ஆனால் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததும் அந்த பழக்கங்கள் அப்படியே காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இது தொற்றுநோய் காலத்தில் மட்டுமல்லாமல் எல்லா நேரத்திலும் பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாக்டீரியாவை அழையா விருந்தாளியாக கொண்டுவருவதை தவிர்க்க கட்டாயம் கழிவறைக்கு செல்போனை கொண்டு செல்லக்கூடாது என்றும், 40% ஆல்கஹால் 60% தண்ணீர் நிறைந்த சானிடைசர்களை கொண்டு அவ்வப்போது செல்போனை சுத்தம்செய்ய வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக, முக்கியமான விஷயங்கள் குறித்து சிந்திப்பதற்கு உகந்த இடமாக இருக்கும் கழிவறைக்குள் செல்போனை எடுத்துச்சென்றால் அதனால் சிந்தனை ஆற்றலும் மங்கும் எனவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.