டிரெண்டிங்

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு முன்பாக பிரான்ஸ் சென்றாரா அனில் அம்பானி ?

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு முன்பாக பிரான்ஸ் சென்றாரா அனில் அம்பானி ?

webteam

ரஃபேல் ஒப்பந்தத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அனில் அம்பானி பிரான்ஸ் பாதுகாப்பு துறை அதிகாரிகளை சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டினார். இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுலின் பேச்சு ஆபத்தானது. மக்களுக்கு எதிராக மோடி செயல்படுவதாக சித்தரிக்கும் வகையில் பேசி ஆட்சியை மாற்ற ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என்றார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிக்கைகள் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ரஃபேல் ஒப்பந்தத்திற்கு முன்பு அனில் அம்பானி பிரான்ஸ் அரசின் பாதுகாப்பு துறை அதிகாரிகளை சந்தித்தாக தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பில் பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் லி டிரியனின் சிறப்பு ஆலோசகர் ஜின் கிளாட் மால்லட், கிரிஸ்டோப் சாலமன் மற்றும் ஜெஃப்ரி பொக்கோட் ஆகியோர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் அனில் அம்பானி ஏர்பஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் பணிபுரிய விரும்பியதாகவும் அதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட தயாராக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அனில் அம்பானிக்கு பிரதமரின் பிரான்ஸ் பயணம் குறித்து முன்கூட்டியே தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரான்சின் டசால்ட் நிறுவனமும் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டாக இணைந்து ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக பிரான்ஸ் சென்ற பிரதமர் தலைமயிலான இந்திய குழுவில் அனில் அம்பானி  இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசும் இந்திய அரசும் நிறுவனங்கள் தேர்வு செய்வதில் எவ்வித தலையீடும் செய்யவில்லை என்று கூறியிருந்தன.