தேவகோட்டையில் கணவன் இறந்த நிலையில் வீட்டை காலி செய்ய மாமியார் வற்புறுத்தியதால் மூன்று பிள்ளைகளுடன் தாய் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிதம்பரநாதபுரத்தில் உள்ள வளர்ப்பு தாய் வசந்தா வீட்டில் ராமதாஸ் என்பவர் வசித்து வந்தார். இவர் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்நிலையில், ராமதாஸின் மனைவி பிர்யதர்ஷனி தனது மகள் மற்றும் மகள்களுடன் மாமியார் வசந்தா வீட்டிலேயே வசித்து வந்தார்.
இறப்பதற்கு முன்பு ராமதாஸ் தொழில் செய்வதற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமியார் வசந்தா மருமகள் பிர்யதர்ஷனியை வீட்டை காலி செய்து செல்லுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மாமியார் வசந்தாவுக்கு ஆதரவாக அவரது தம்பி ராஜேந்திரனும் பிரியதர்ஷினியை மிரட்டி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பிர்யதர்ஷனி கடந்த 4ஆம் தேதி தனது பிள்ளைகள் பர்வதவர்த்தினி (16,), திருநீலகண்டன் (14,) ஹரிகிருஷ்ணன் (12) ஆகிய மூவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார். இதில் பிர்யதர்ஷனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிள்ளைகள் மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் இந்நிலையில் மகள் பர்வதவர்த்தினியும் மகன் திருநீலகண்டனும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். ஹரிகிருஷ்ணன் என்ற சிறுவன் மருத்துவமனையில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.