இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்களர்களுக்கு கொடுக்க முயன்ற பணம் கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தங்களுக்கு கிடைக்கும் தகவல் மற்றும் புகார்களின் அடிப்படையில் சோதனையும் நடத்தி வருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகளை திமுகவினர் பறிமுதல் செய்து பெயர்கள் பட்டியலையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பணப்பட்டுவாடா செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மற்றும் தினகரன் தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் பணப்பட்டுவாடா செய்ததாக தேர்தல் அதிகாரியே தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு எழும்பூரில் உள்ள முன்னாள் எம்.பி. பாலகங்காவின் வீட்டில் பணப்பட்டுவாடா நடப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களது வாக்காளர் அட்டையை காட்டி வரிசையில் நின்று பணத்தை பெற்றுச் செல்வது போல் அந்த வீடியோவில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு அளித்தனர். அதேபோல், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு அதிமுக சார்பில் வாக்காளர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் தரப்படுவதாக சிறப்பு அதிகாரி அதிகாரி விக்ரம் பத்ராவிடம் திமுக புகார் மனு அளித்தனர். அதேபோல், பணப்பட்டுவாடா நடப்பதாக அதிகாரி விக்ரம் பத்ராவிடம், தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் புகார் செய்தார்.
ஆர்.கே.நகர் காவல் நிலையம் எதிரே உள்ள வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.