சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் காரை பார்த்ததுமே ஒரு நிமிடம் நின்று அந்த கார் கண்ணாடியை பார்த்து தலை சீவுவதோ அல்லது முகம் பார்ப்பதையே பலரும் தவறாமல் செய்வார்கள். அதுவும் பிடித்தமான காராக இருந்தால் கண்கொட்டாமல் பார்க்கவும் தவற மாட்டார்கள்.
அந்த வகையில் பிடித்த கலரில், பிடித்தமான பிராண்டில் கார்கள் இருந்தால் அதன் முன்பு நிற்பது போல போட்டோ எடுத்து பகிர்ந்து நண்பர்களுடன் பந்தா காட்டும் சில குழுக்களும் இருக்கத்தான் செய்கிறது. அப்படியான சம்பவம் குறித்த வீடியோதான் வட இந்தியாவின் ஒரு பகுதியில் நடந்திருக்கிறது. ஆனால் அதில் குறிப்பிடக்கூடிய விஷயமே காரின் உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி செயல்தான். அப்படி என்ன செய்தார் என்பதை காணலாம்.
அதன்படி, இளைஞர் இருவர் ஸ்போர்ட்ஸ் காராக மாற்றியமைக்கப்பட்ட ஸ்விஃப்ட் காரை பார்த்ததும் அசந்துப் போனவர்கள் அதன் முன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள நினைத்திருக்கிறார்கள். இதனை காரின் உரிமையாளரான அன்ஷு பத்ரா CCTV-ல் முதலில் பார்த்த பிறகு, சாலையோரம் பார்க் செய்யப்பட்டிருந்த காருக்கு அருகே சென்று அந்த இளைஞர்களிடம் பேச்சுக் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார்.
இதுபோக கார் சாவியை கொடுத்து காருக்குள்ளே இருந்தே வெளியே வரும் வகையில் வீடியோவும் எடுத்து அந்த இளைஞர்களை மகிழச் செய்திருக்கிறார். கார் ஓனரின் அந்த செயலால் பூரித்துப் போயிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். இது குறித்து பேசியுள்ள அந்த இளைஞர்கள், “உங்கள் காரை பார்ப்பதற்காகவே தினமும் இந்த வழியே வருவோம். இப்போ ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.” என உணர்ச்சி ததும்ப கூறியிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வு அனைத்தையும் வீடியோவாக அன்ஷு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ கிட்டத்தட்ட 35.5 மில்லியன் அதாவது மூன்றரை கோடிக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவை கண்டு வியந்துப்போய் கார் ஓனரை பாராட்டியும் அவரது செயலை வரவேற்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.