காலவரையின்றி மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகள் தொடர்பாக, உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டாசு உற்பத்தி என்பது சுற்றுப்புறச் சூழல் விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது. இதிலிருந்து விலக்கு அளிக்குமாறு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக்கூறி பல்வேறு பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அமர்வு, நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கும்,உற்பத்திக்கும் சில நிபந்தனைகளுடன் தீர்ப்பளித்தது. அதில் குறைந்த அளவிலான புகை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டும்தான் அனுமதி எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பால் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அலோசனை கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் மாரியப்பன், உச்சநீதிமன்றம் தீர்ப்பால் பட்டாசு உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளது எனவும் இதனால் காலவரையின்றி அனைத்து பட்டாசு நிறுவனங்களும் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி, பட்டாசு தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காலவரையின்றி மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகள் தொடர்பாக, உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்னையில் தீர்வு காண தமிழக அரசு நீதிமன்றத்தை உரிய முறையில் அணுகியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், மக்கள் விரும்பாத திட்டங்களை முன்னெடுப்பதில் உள்ள ஆர்வம், மக்கள் நலம் சார்ந்த விஷயங்களை செயல்படுத்துவதில் இல்லை என்பது வெளிப்பட்டுக் கொண்டே வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களை தொடர்ந்து போராட்ட நிலையிலேயே வைத்திருக்கும் எந்த அரசும் மக்கள் விரோத அரசுதான் எனவும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் டிடிவி தினகரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.