அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995 – 96ஆம் ஆண்டுகளில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மூலம் டிடிவி தினகரன் ஒரு கோடியே 4 லட்சம் அமெரிக்க டாலர்களை வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும், அதில் மோசடி நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 10ம் தேதி சென்னை எழும்பூர் பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த டிடிவி தினகரன் தன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்து, ஜுலை 31ம் தேதிக்குள் ஒரே நாளில் புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்யவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை தினசரி அடிப்படையில் 3 மாதத்திற்குள் முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.