டிரெண்டிங்

“ஓபிஎஸ் மறுத்தால் நான் எங்கு சந்தித்தேன் என்பதை சொல்வேன்” - டிடிவி தினகரன்

“ஓபிஎஸ் மறுத்தால் நான் எங்கு சந்தித்தேன் என்பதை சொல்வேன்” - டிடிவி தினகரன்

webteam

ஓ. பன்னீர்செல்வத்திற்கும் தனக்கும் இடையேயான சந்திப்பு பற்றி புதிய தலைமுறையின் கேள்விகளுக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். 

இன்று பத்திரிகையாளர்களை தனது இல்லத்தில் டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது அவரிடம் ஒ.பன்னீர்செல்வத்தை நீங்கள் சந்தித்ததாக கூறியிருந்தீர்கள், ஆனால் அந்தச் சந்திப்பை அமைச்சர்கள் பலரும் மறுத்துள்ளனர். நீங்கள் கட்சியை பிளவுபடுத்தவே இவ்வாறு கூறி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதை பற்றி உங்களின் கருத்து என்ன என்று நம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு டிடிவி தினகரன், “அவர்கள் இப்போது ஏதோ அவர்கள் சேர்ந்து ஒன்றாக இருப்பதை போலவும் நான் போய்தான் அவர்களை பிளவு படுத்துவதைபோலவும் கூறுகிறார்கள். சரி, அப்படியே இருந்துவிட்டு போகட்டும்? அதனால் என்ன?” என்றார்.

அடுத்து தங்கமணி பேச்சு குறித்து கேட்டதற்கு, “தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டுகிறதே அதற்கு காரணம் என்ன? அவர்கள் ஆளாளுக்குப் பேசி இதனை திசை திருப்புவதற்கு முயற்சிக்கிறார்கள். கடந்த ஜூலையில் ஒபிஎஸ் என்னை பார்த்த போது ‘என்னுடைய நடவடிக்கை தவறாக போய்விட்டது. நான் தவறு செய்துவிட்டேன். என்னுடன் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கலந்து பேசிவிட்டு உங்களுடன் வந்து இணைக்கிறேன்’என்றார். நானும் அவரும் 20 நிமிடம் பேசியிருப்போம், அவ்வளவுதான் ” என்றார். 

எடப்பாடி பழனிசாமியை விட்டுவிட்டு உங்களுடன் வந்து ஒபிஎஸ் இணைந்தால் நீங்கள் அவரை சேர்த்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, “அப்போது அவர் வருகிறேன் என்று சொன்னார். ஆனால் இப்போது வந்தால் சேர்த்துக் கொள்ள முடியாது. அதற்காகதான் ஒன்றரை வருஷம் நான் இதை வெளியில் சொல்லாமல் இருந்தேன். திரும்பவும் அதே நண்பர் மூலம் என்னை கேட்டதால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இதனை நான் வெளியில் சொன்னேன். பன்னீர்செல்வம் என்னை பார்க்கவில்லை என்று மறுத்தால், அவரை நான் எந்த நண்பர் வீட்டில் சந்தித்தேன் என்பதை ஊடகங்களுக்கு தெரிவிப்பேன்” என்றார்.