டிரெண்டிங்

செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்

webteam

யாரையும் பிடித்து வைக்க முடியாது, செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

ஜெயலலிதா மறைவிற்கு பின், எடப்பாடி அணியில் இருந்து பிரிந்து தினகரன் அணியில் செயல்பட்டு வந்தார் செந்தில் பாலாஜி. இதனால் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் மேல் முறையீடுக்கு செல்லாமல் இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி தரப்பு தயாரானது. இதில் செந்தில் பாலாஜிக்கும் டிடிவி தினகரனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து ''சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப் போகிறார்கள்'' என டிடிவி தினகரன் அமமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில், செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதன்படி 18 ஆண்டுகளுக்கு பின் திமுகவில் இருந்து விலகி சென்ற செந்தில்பாலாஜி இன்று மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

செந்தில்பாலாஜியின் விலகல் குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், ''யாரையும் பிடித்து வைக்க முடியாது. செந்தில்பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க. சொந்த பிரச்னைகளால் ஒதுங்கி இருக்கிறேன் என்று கூறிய செந்தில் பாலாஜி, திமுகவிற்கு சென்றுவிட்டார். செந்தில்பாலாஜி அதிமுகவில் சேர்ந்திருந்தால் கூட எனக்கு வருத்தமிருந்திருக்காது.

ஆனால், கூலாக சென்று திமுகவில் இணைந்ததுதான் வருத்தம். எந்த காலத்திலும் துரோகிகளுடன் நான் இணைய மாட்டேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் மேல் முறையீடு கிடையாது'' என்று தெரிவித்தார்.