டிரெண்டிங்

“நானே போக சொன்னாலும் 18 பேரும் போக மாட்டார்கள்” - டிடிவி தினகரன்

“நானே போக சொன்னாலும் 18 பேரும் போக மாட்டார்கள்” - டிடிவி தினகரன்

rajakannan

நானே போங்கள் என்று சொன்னாலும் 18 பேரும் என்னைவிட்டு போக மாட்டார்கள் என அம்மா முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு அளித்தனர். இரண்டு நீதிபதிகள் அளித்துள்ள மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தற்காலிகமாக தப்பியுள்ளது. 18 எம்எல்ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலவாடி ரமேஷ் அறிவிப்பார் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “சபாநாயகர் உத்தரவில் புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு; தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசுகையில், “18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பால் தங்கள் தரப்புக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. இந்தத் தீர்ப்பால் தமிழக அரசின் ஆயுள் மேலும் சில மாதங்களுக்கு நீளும் என்பதுதான் உண்மை. மக்கள் விரும்பாத இந்த அரசுக்கு நீதிமன்றமே ஆயுளை நீட்டித்துவிட்டது.

தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த 50 சதவீத வெற்றி. தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உள்பட 21 பேரும் ஒன்றாகத்தான் உள்ளோம். நானே போங்கள் என்று சொன்னாலும் 18 பேரும் என்னைவிட்டு போக மாட்டார்கள். தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தாலும் என்னுடன்தான் 18 பேரும் இருப்பார்கள். பணத்துக்காகவோ, சொத்துக்காகவோ தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் என்னுடன் இல்லை” என்று தெரிவித்தார். 

தீர்ப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “சபாநாயகருக்கு சாதகமாக இரண்டு நீதிபதிகளில் யாரும் பேசவில்லை. சபாநாயகரின் முடிவு சரியானது என்றும் கூறவில்லை. மூன்றாவது நீதிபதி வரும் போது எங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைப்பதோடு, ஆவணங்களையும் தாக்கல் செய்து எங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறுவோம்” என்று கூறினார்.