ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரண்டாவது சுற்றிலும் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார். முதல் சுற்று முடிவில் டிடிவி 5,339 வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார்.
தொடர்ந்து இரண்டாவது சுற்றாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதிலும் டிடிவி தினகரன் 7,276 வாக்குகள் பெற்று டிடிவி தினகரனே முன்னிலை பெற்றார். அப்போது அதிமுக - டிடிவி தினகரன் தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாற்காலிகள் தூக்கி வீசி ஏறியப்பட்டன. தேர்தல் அலுவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் உள்ளது.
தேர்தல் அலுவலர்கள் தாக்கப்பட்டதால், மோதலில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதிமுக பெண் முகவர் உள்பட 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் வாக்கு எண்ணிக்கையை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.