டிரெண்டிங்

திரிபுராவில் உடைக்கப்பட்டது லெனின் சிலை !

திரிபுராவில் உடைக்கப்பட்டது லெனின் சிலை !

webteam

திரிபுராவில் பெலோனியா என்ற இடத்தில் இடதுசாரி புரட்சியாளர் லெனின் உருவச்சிலை புல்டோசர் உதவியுடன் இடித்துத் தள்ளப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

திரிபுராவில் கடந்த 25ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து பாஜக தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் திரிபுராவில் பெலோனியா என்ற இடத்தில் இடதுசாரி புரட்சியாளர் லெனின் உருவச்சிலை புல்டோசர் உதவியுடன் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.

லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் சிலையில் இருந்து தலையை தனியே எடுத்துள்ளனர். லெனின் சிலையில் இருந்து எடுக்கப்பட்ட பாகத்தை கொண்டு கால்பந்து விளையாடியுள்ளனர் என கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வன்முறையை‌க் கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அ‌ம்மாநி‌ல ஆளுநர்‌ மற்றும் காவல்துறை தலை‌மை‌ இயக்குநரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறு‌த்தியு‌ள்ளார். புதிய அரசுப் பதவியேற்கும் வரை அமை‌தி நிலைநாட்டப்படுவதை உறுதி செ‌ய்யுமாறு தொலைபேசி வாயிலாக அவர்களிடம் ராஜ்நாத்‌ சிங் கேட்டுக்கொண்டுள்ளார்