பஸ்ஸில் பயணிக்க காத்திருக்கும் பயணிகள் PT
டிரெண்டிங்

”ஆன்லைனில் முன்பதிவு செய்தும் இடம் கிடைக்கல” - தாய், மகன் தவிப்பு! கூடலூர் மக்கள் வைக்கும் கோரிக்கை

கூடலூருக்கு இயக்கப்படக்கூடிய அரசு பேருந்துகளுக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்

PT WEB

போக்குவரத்து துறையின் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும், சர்வர் குறைபாடு காரணத்தால் கூடலூரை சேர்ந்த தாயும், மகனும் கடைசி நேரத்தில் அரசு பேருந்தில் பயணிக்க முடியாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூடலூருக்கு இயக்கப்படக்கூடிய அரசு பேருந்துகளுக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹேம்நாத் மற்றும் அவரது தாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் இருந்து கூடலூர் வர திட்டமிட்டுள்ளனர். இதற்காக திருச்சியில் இருந்து கூடலூர் இயக்கப்படும் அரசு பேருந்தில் ஹேம்நாத் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவும் செய்துள்ளார். G PAY மூலம் பணம் செலுத்திய நிலையில் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதற்கான எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு திருச்சியில் இருந்து கூடலூருக்கு இயக்கப்படும் பேருந்தில் ஏற அவரும் அவரது தாயும் வந்துள்ளனர்.

அப்போது நடத்துனர், அவர்களின் உடைமைகளை பேருந்தில் வைக்க சொல்லிவிட்டு இருக்கையில் அமர சொல்லி இருக்கிறார். இருவரும் இருக்கையில் அமர்ந்த நிலையில் பேருந்தில் ஏறிய நடத்துனர் இருவரது பெயரையும் கேட்டிருக்கிறார். ஆனால் முன்பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருவர் பெயரும் இல்லை என தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து இருவரும் அந்த பேருந்தில் கூடலூருக்கு வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாற்று பேருந்துகளில் பயணித்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே கூடலூர் வந்து சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் ஹேம்நாத் கூறுகையில், "நான் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இரு இருக்கைகளும் காலியாக இருந்தது. டிக்கெட் முன்பதிவு செய்த போது வங்கி கணக்கிலிருந்து பணமும் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் டிக்கெட் முன்பதிவு குறித்து எங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. வழக்கமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது தாமதமாக தான் குறுஞ்செய்தி வரும். இது முழுக்க முழுக்க போக்குவரத்து துறையின் சர்வர் குறைபாடு காரணமாக ஏற்பட்ட தவறு” என்றார்.

முன்பெல்லாம் கூடலூரில் இருந்து பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் SETC பேருந்துகளுக்கு மட்டுமே முன்பதிவு முறை நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போது TNSTC பேருந்துகளுக்கும் முன்பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளதால் கூடலூரை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கூடலூருக்கு இயக்கப்படும் பேருந்துகளை ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் முன்பதிவு செய்து விடுகிறார்கள். இதனால் கூடலூருக்கு பயணிக்க கூடிய மக்களுக்கு பேருந்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே போக்குவரத்து கழகம் கூடலூருக்கு இயக்கப்படக்கூடிய அரசு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.