காவலர் பயிற்சியில் இருந்த திருநங்கை தற்கொலை முயற்சி செய்த விவகாரத்தில், இரண்டு காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சம்யுக்தா (24) என்பவரும் கடந்த நான்கு மாதமாக பயிற்சி பெற்று வருகிறார்.
பயிற்சிப் பள்ளியின் முதல்வர் முத்துகருப்பன், துணை முதல்வர் மனோகரன் ஆகியோர் சம்யுக்தாவின் பிறப்பு குறித்து அடிக்கடி தவறாக பேசியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் கூறி டிஐஜி சத்திய பிரியாவிடம் தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், திருநங்கை சம்யுக்தா தனது பிறந்த நாளான கடந்த 9ஆம் தேதி விடுதியில் கிருமி நாசினியை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த சம்யுக்தாவை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சம்யுக்தாவிடம் விசாரணை நடத்தியதில், பயிற்சியில் மற்றவர்களை போன்று தனது உடல் ஒத்துழைக்கவில்லை அதன் காரணமாகவே தற்கொலை முடிவை எடுத்தேன். தன் தற்கொலைக்கு வேறு எந்த காரணமும் இல்லை என கூறினார்.
ஆனால் காவலர் பயிற்சிப் பள்ளியில் அவர் பயிற்சி பெறும் வீடியோவில் சம்யுக்தா பயிற்சியை சிறப்பாக மேற்கொண்ட ஆதாரங்கள் உள்ள நிலையில், அவர் கூறுவது உண்மையான காரணம் தானா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் பயிற்சிப் பள்ளியின் உதவி காவல்ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் காவலர் இஸ்ரேல் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.