நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்நிலையில் தொடரின் அடுத்தக்கட்டமான பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் தொடங்க இருக்கிறது. இந்தப் பிளே ஆஃப் சுற்றில் மும்பை. டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் களம் காண்கின்றன. இதுவரை லீக் சுற்றுப் போட்டிகளில் 5 பந்துவீச்சாளர்கள் 20-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
அதில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா முதல் இடத்தில் இருக்கிறார். டெல்லி அணிக்காக விளையாடும் ரபாடா இதுவரை 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் அவரின் சராசரி 17.80 ஆக இருக்கிறது. ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்களுக்கு "பர்பள் கேப்" கொடுக்கப்படும். இப்போதுவரை அது ரபாடா வசமே இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்பிரீத் பும்ரா 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரின் சராசரி 15.73 மட்டுமே மேலும் பவுலிங் எகானமி 6.96 ஆக இருக்கிறது. கடந்தாண்டு காயத்தால் அவதிப்பட்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் பார்முக்கு வராமல் திணறிய பும்பா. இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் பழைய அசத்தலுக்கு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் 20 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறவில்லை. ஆனால் அந்த அணியில் ஆர்ச்சர் மட்டும் தனித்து நிற்கிறார். பவுலிங்கில் அவர் சராசரி 18.25, எகானமி 6.55 ஆக இருக்கிறது.
பெங்களூர் அணியில் விளையாடும் சுழல் மன்னன் சஹால் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பொதுவாக டி20 போட்டிகளில் சுழற்பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்குவார்கள். ஆனால் சஹால் பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் சற்று திணறிதான் போனார்கள். அதுவும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்களை கொடுத்து 3 விக்கெட் எடுத்தது சிறப்பாக இருந்தது.
மும்பை அணியின் ட்ரெண்ட் போல்ட்டும் இந்தாண்டு ஐபிஎல்லில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மொத்தம் இதுவரை 20 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதுவும் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை எடுத்தார். இந்த ஐபிஎல் தொடரில் மும்பையின் தூணாக இருக்கிறார் போல்ட்.