டிரெண்டிங்

கர்நாடகா விடுதியில் தமிழக போலீசார் குவிப்பு

கர்நாடகா விடுதியில் தமிழக போலீசார் குவிப்பு

Rasus

கர்நாடகாவில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலமைச்சர் பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த மாதம் 22-ஆம் தேதி ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துவிட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுதி விடுதியில் தங்கினர். இதனிடையே டிடிவிக்கு ஆதரவு கொடுத்த கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன், திடீரென முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு தாவினர். இதனையடுத்து புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள், கடந்த 18-ஆம் தேதி இரவு முதல் கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள தனியார் விடுதிக்கு மாறினார்கள்.

தமிழக அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையை அடுத்துள்ள வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. அதில், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட சசிகலாவின் நியமனம் ரத்து. அதிமுகவில் டிடிவி தினகரன் அறிவித்த நீக்கமோ, நியமனங்களோ செல்லாது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகுவில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட வாகன பதிவெண் கொண்ட வாகனங்களில் சென்றுள்ள தமிழக காவல்துறை அதிகாரிகள், விடுதிக்குள் சென்றுள்ளனர். எம்எல்ஏக்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் தான் தங்கியுள்ளனரா..? அல்லது கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து எம்எல்ஏக்களிடம் தமிழக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

விடுதிக்குள் வெளியே நின்றுக்கொண்டிருக்கும் தமிழக போலீசாரிடம் இதுகுறித்து கேட்டபோது, அதிகாரிகள் உள்ளே இருப்பதாகவும், தங்களுக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது எனவும் தெரிவித்து விட்டனர். மேலும், ஒரு மாநில போலீசார் மற்றொரு மாநிலத்திற்குள் நுழையும் போது அதற்கு அம்மாநில காவல்துறையின் சம்மதம் பெற வேண்டும் என்பதே சம்பிராதயம். அதுகுறித்தும் விடுதிக்குள் வெளியே நின்றுக்கொண்டிருக்கும் போலீசாரிடம் கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் எல்லாம் உயர் அதிகாரிகளுக்கு மட்டும்தான் தெரியும் எனவும் கூறினார்.