டிரெண்டிங்

“ஸ்திரமில்லாத அரசு; நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றே வழி”: நெருக்கடி கொடுக்கும் எதிர்க்கட்சிகள்

“ஸ்திரமில்லாத அரசு; நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றே வழி”: நெருக்கடி கொடுக்கும் எதிர்க்கட்சிகள்

webteam

தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது‌ என்ற முடிவுக்கு வர வேண்டும். அதற்கு மாறாக அரசு எடுக்கும் வேறு எந்த நடவடிக்கையும் நியாயமாக இருக்காது என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா பேசும்போது, “இன்றைய தினம் திமுக, காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசினோம். தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை ஸ்திரத்தன்மையற்று இருக்கிறது. இந்த நிலையில் ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து அய்யப்பாடுகள் எழுந்திருக்கின்றன. இதுவரை ஆளுநர், முதலமைச்சரை அழைத்து அவருக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறதா? இல்லையா? என்று கேட்காமல் இருக்கிறார். இந்த நிலையில்தான், குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளோம். அவர் எங்களுடைய கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டார். ஆனால் இதுகுறித்து முடிவு எடுக்க போதிய கால அவகாசம் தேவை என்று அவர் கூறினார். ஆளுநர் பொறுப்பாக செயல்பட்டிருந்தால் இன்று குடியரசுத் தலைவரை சந்திக்கின்ற சூழலே ஏற்பட்டிருக்காது” என்று கூறினார்.

திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், “ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறும்போது, அதை ஒரு கட்சிக்குள் இருக்கும் பிரச்னை என்று ஆளுநர் கூறுவது மிகவும் தவறானது. ஓ.பன்னீர்செல்வம் தனியாக பிரிந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டபோது, பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட இதே ஆளுநர், இப்போது வேறு நிலைப்பாடு எடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. குடியரசுத் தலைவர் மீது நம்பிக்கை வைத்து எங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம். இதற்கு அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சியினரிடம் பேசி முடிவெடுப்பார்” என்றார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், “இன்றைய நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு 113 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிக்கு 120 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆளுங்கட்சி தனது பெரும்பான்மையை நிரூபித்தே ஆக வேண்டும். குடியரசுத் தலைவர் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவராக நாட்டு மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக எங்களுடைய கோரிக்கைகளை கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கால அவகாசம் கேட்டுள்ளார். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதைப் பொறுத்து எங்களுடைய நடவடிக்கை அமையும்” என்றார்.