ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி அணிகளின் இணைப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் டெல்லி கயிற்றில் தொங்கும் தலையாட்டி பொம்மைகள் என கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன்றிய பெரியார் மண்ணில் நேரடியாக மக்களின் ஆதரவைப் பெறமுடியாது என்பதை நன்றாகவே அறிந்திருக்கும் பாஜகவினர், திராவிடத்தையும் அண்ணாவையும் “போலியாக” பெயரளவில் வைத்துக்கொண்டுள்ள இயக்கமான அதிமுகவின் தலைமையிலான ஆட்சியைப் பயன்படுத்தி கொல்லைப்புறமாகத் தமிழகத்துக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள் என்பது இதன் மூலம் பட்டவர்த்தனமாகத் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய பீஹாரில் ஆளுநர் காட்டிய அவசரத்தை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரும் காட்டியிருப்பது, பாஜகவின் ஆளுமை இந்த இணைப்பில் எந்தளவிற்கு ஆழமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அணிகள் இணைப்புக்காக இரண்டு நடிகர்களும் கட்சி அலுவலகத்திற்கு கிளம்பிய அதேநேரத்தில், பதவி ஏற்பு நிகழ்வுகளுக்காக ஆளுநர் மாளிகைக்கு விரைகிறார் தலைமைச் செயலாளர். ஆக, அனைத்துமே மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவினால் திரைக்கதை எழுதப்பட்டு, முழுமையாக ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ள காட்சிகள் என்பது தெளிவாகிவிட்டது என்றும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை - அவருடைய மரணம் ஆகியவற்றில் உள்ள மர்மங்கள் வெளிப்படவேண்டும் என தர்மயுத்தம் நடத்தியவர்கள், அந்த மர்மங்கள் வெளிப்படாமலேயே ஒருதாய் மக்களாகிவிட்டார்கள் என்றால், மரண மர்மங்களை மறைப்பதில் பாஜக அரசும் உடந்தையாக இருக்கிறதா என்ற கேள்விக்கான விடை கிடைக்க வேண்டும். இங்கு நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகளும், ஊழல் பணத்தை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தண்ணீர் போல் வாரி இறைத்தது தொடர்பான நடவடிக்கைகளும் பாஜக அரசால் மூடி மறைக்கப்படுமா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.
நீட் தேர்வு, காவிரி உரிமை என அனைத்திலும் தமிழகத்திற்கு எதிராக செயல்படக்கூடிய மத்திய பாஜக அரசை நோக்கி ஒரு வார்த்தை கேட்க முடியாதவர்களாகி, பதவி வேட்கைக்காக டெல்லியின் எடுபிடிகளாக அதிமுகவின் இரு அணியினரும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தனை நடிப்பும் மத்திய அரசான பாஜகவினால்தான் திரைமறைவில் இயக்கப்பட்டது என்று கூறியுள்ள ஸ்டாலின், ‘இணைப்பு’க்கு ஏற்பட்ட திடீர் சிக்கலின்போது ஆபத்பாந்தவனாக அவதாரம் எடுத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும், பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களிடம் செல்வாக்குள்ளவருமான ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் அதிமுகவின் இருதரப்பினரும் ஆலோசனை நடத்தி, பதவி - அதிகாரங்களை உறுதி செய்து கொண்டதில் “இணைப்புக்கு முகமூடியாக” இருந்து செயல்பட்ட பாஜகவின் செயல் அம்பலமாகிவிட்டது. தர்மயுத்தம், ஒருதாய் மக்கள் எனத் தலைப்புகள் மாறினாலும், டெல்லியிலிருந்து இயக்கப்படும் கயிறுக்கேற்ப தலையாட்டும் பொம்மைகள் நாங்கள் என்பதை அதிமுகவின் இரு தரப்பினரும் அப்பட்டமாக நிரூபித்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
மெஜாரிட்டியை இழந்த இந்த ஆட்சி எப்போது வீட்டுக்குப் போகும் என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு, ஜனநாயக வழியில் விரைவில் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது. அப்போது கல்லறையில் புதைந்துள்ள உண்மைகளும், கஜானாவில் அடிக்கப்பட்ட கொள்ளைகளும் வெளிவரும் என்றும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.