அன்புச்செழியனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ, அமைச்சர் என யார்வந்தாலும் விடமாட்டோம் என்ற விஷால் பேச்சுக்கு ஆதாரமில்லாமல் போகிற போக்கில் புழுதிவாரி தூற்றியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
திரைப்பட இணைத் தயாரிப்பாளர் அசோக்குமார் மரணத்தை அடுத்து, கந்துவட்டிக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. மதுரையில் நடைப்பெற்ற அசோக் குமாரின் இறுதிச்சடங்கில் நடிகர் விஷால் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், கந்துவட்டிக் கொடுமையை எதிர்த்து திரைத்துறையில் புரட்சி வெடித்துள்ளதாகவும், அன்புச்செழியனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ, அமைச்சர் என யார் வந்தாலும் விடமாட்டோம் என ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அன்புச்செழியன் விவகாரத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை விஷால் முன்வைப்பதாக கூறினார். நடிகர்கள் தலா ரூ.1 கோடி என ரூ.500 கோடிக்கு மேல் சுழற்சி நிதி திரட்டி தயாரிப்பாளர்களுக்கு உதவலாமே? நடிகர்கள் நிதி திரட்டி சிறுபட தயாரிப்பாளர்களுக்கு குறைந்த வட்டியில் ஏன் கடன் தரக்கூடாது? பொது நிதியை உருவாக்கி தயாரிப்பாளர்களுக்கு கடனுதவி செய்யலாமே என்று கூறினார். தமிழக அரசு திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. அரசுடன் இணைந்து செயல்பட திரைத்துறையினர் என்ன முயற்சி எடுத்துள்ளனர். திரைத்துறையினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை விடுத்து நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவுங்கள். கந்துவட்டி விவகாரத்தில் திரைத்துறையினர் அரசுக்கு இலவச ஆலோசனைகள் வழங்க வேண்டாம் என கூறினார்.