எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்து வருகிறார்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதிலிருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி என பல மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநரிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் மூலம் மக்களின் குறைகளை ஆளுநர் குறிப்பெடுத்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே நடைபெற்ற ஆளுநரின் ஆய்வுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக மாநில நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு துளியும் அதிகாரமில்லை என குறிப்பிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நிர்வாகத்தை சீர்படுத்த விரும்பினால் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுபோன்ற ஆய்வுகளை ஆளுநர் உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதனையும் மீறி இன்று ஆளுநர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
இதனிடையே, கடலூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு கொடியுடன் பேரணி நடத்தினர். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றிருந்தனர். இதனால் திட்டமிட்ட பாதையில் ஆளுநர் செல்லாமல் மாற்று பாதையில் சென்றார். ஆனால் அதனையும் கண்டுபிடித்து அவர் வாகனம் செல்லும் வழியில் திமுகவினர் கருப்புக்கொடி காட்டினர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஆளுநர் ஆய்வு நடத்தினார்.