டிரெண்டிங்

காஷ்மீரில் பலியான இளையராஜா குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு

webteam

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் வீர மரமணடைந்த தமிழக ராணுவ வீரர் இளையராஜாவின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் கண்டனி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜாவின் உயிரிழப்பு வேதனையளிப்பதாக கூறியுள்ளார். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரரை இழந்துவாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜாவின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த இரண்டு பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிப்பாய் இளையராஜா என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த மற்றொருவர் சிப்பாய் காவாய் வாமன். சோபியானில் நேற்று முதல் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.