டிரெண்டிங்

காட்டுத் தீ பரவ சுக்குநாரி புல்லே காரணம் : முதலமைச்சர் விளக்கம்

காட்டுத் தீ பரவ சுக்குநாரி புல்லே காரணம் : முதலமைச்சர் விளக்கம்

rajakannan

குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றம் செல்ல திருப்பூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த குழுக்கள் எந்த அனுமதியும் பெறாமல் சென்ற போது காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

குரங்கணி காட்டுத்தீ உயிரிழப்புகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.‌ அப்போது பேசிய அவர், “அனுமதிக்கப்பட்ட மலையேற்ற பாதை குரங்கணியிலிருந்து தமிழ்நாடு- கேரள எல்லையில் அமைந்துள்ள டாப் ஸ்டேஷன் வரை 11.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது. ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதியினை சேர்ந்த 12 நபர்கள் கொண்ட குழு டாப் ஸ்டேஷன் செல்வதற்கு நுழைவுச் சீட்டு பெற்றனர். ஆனால் மலையேற்றத்திற்கு அங்கீகரிக்கப்படாத குரங்கணியிலிருந்து கொட்டக்குடி காப்புக்காட்டு வழியாக கொழுக்குமலை தனியார் தேயிலைத் தோட்டத்திற்கு சென்றனர்.  

அனுமதியின்றி தனியார் தேயிலைத் தோட்டத்தில் தங்கி அங்கீகரிக்கப்படாத பாதையில் திரும்பினர். சென்னையிலிருந்து 27 நபர்கள் கொண்ட மற்றொரு குழுவும் தனியார் தேயிலை தோட்டத்தில் தங்கினர். அவர்கள் எந்த அனுமதியும் பெறவில்லை. இந்த இரண்டு குழுவினரும் காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்த தகவல் பெற்றதுமே விரைவாக நடவடிக்கை எடுக்‌கப்பட்டது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவதை தடுக்கவும்‌ பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட அதுல்ய மிஸ்ரா இரண்டு மாத காலத்தில் தமது பரிந்துரையை அளிப்பார். 

விபத்து நடந்த மலைப்பகுதிகளில் எண்ணை பதம் கொண்ட சுக்குநாரி அதிகமாக இருந்ததால் தான் தீ வேகமாக பரவியிருக்கிறது. ட்ரெக்கிங் அழைத்து சென்ற நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  சிறப்பு அதிகாரியாக அதுல்யா மிஷ்ரா நியமிக்கப்பட்டு விபத்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார்.