டிரெண்டிங்

திருக்குறள் மீது தீராத ஆர்வம் - தட்டு வண்டியில் தினம் ஒரு ’குறள்’ எழுதும் பெரியவர்

திருக்குறள் மீது தீராத ஆர்வம் - தட்டு வண்டியில் தினம் ஒரு ’குறள்’ எழுதும் பெரியவர்

EllusamyKarthik

புதுச்சேரி நகரின் பரபரக்கும் சாலைகளில் தட்டுவண்டி ஓட்டும் பெரியவர் ஒருவர் தன் வண்டியின் பின்புறம் உள்ள பலகையில் தினமும் ஒரு திருக்குறளை எழுதி வருகிறார்.

அவரை சந்தித்து பேசினோம்…

‘என் பேர் தாமோதரன். என் சொந்த ஊர் திருச்சி. பத்தாம் வகுப்பு வர படிச்சிருக்கேன். இப்போ பாண்டிச்சேரியில் இருபது வருஷமா தட்டு வண்டி ஓட்டி  வர்றேன்.

திருச்சியில் நான் இருந்தப்போ எங்க வீட்டுக்கு எதிர இருந்த வீட்டுல புத்தம் புதுசா திருக்குறள் புத்தகம் ஒன்று இருந்தது. அதை யாருமே உபயோக படுத்தாம இருந்தாங்க. அதை பார்த்ததும் நான் அவர்களிடமிருந்து இரவலாக அந்தப் புத்தகத்தை கேட்டு வாங்கினேன். 

அப்புறம்  அந்த திருக்குறள் புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன். அது எனக்கு திருக்குறள் மேல பேர் ஆர்வத்த கொடுத்துச்சு. அப்படியே என் சக நண்பர்கள் செய்யும் சில செயல்களுக்கு திருக்குறளைச் சொல்லி, அவர்களுக்கு அந்த குறளின் விளக்கத்தையும் சொல்ல ஆரம்பித்தேன். 

2000க்கு அப்புறமா தட்டுவண்டி இழுக்கும் தொழிலை செய்ய ஆரம்பிச்சேன். அப்போ ஆட்டோ, பஸ் மாதிரியான வாகனத்துல தத்துவங்கள் எழுதியிருப்பதை பார்த்தேன். உடனே நாமும் ஏன் இது போல நம் வண்டியில் எழுதக் கூடாதுன்னு யோசிச்சேன். 

எனக்கு திருக்குறள் மேல இருந்த தீராத ஆர்வத்தினாலும், தமிழ் மொழி மீது இருந்த பற்றாலும் என் தட்டு வண்டியின் பின்புறம் ஒரு கரும்பலகையை பொருத்தி, தினம் ஒரு திருக்குறள் எழுத வேண்டும் என எழுத ஆரம்பித்தேன்.

அந்த குறளுக்கான பொருளையும் மக்களுக்கு புரியும் வகையில் நடை முறை சொற்களை பயன்படுத்தி நானே சொந்தமாக எழுத ஆரம்பித்தேன். 

இதன் மூலம் உலக பொதுமறையின் புகழை பரப்பி வருகிறேன்.  அனைவருக்கும் பயன்படும் வகையில் நான் தொடர்ந்து இருபது ஆண்டுகளாக திருக்குறளை எழுதி வருகிறேன்.

நாள் தவறாமல் நான் கலையில் தொழிலுக்கு செல்வதற்கு முன்பே திருக்குறளை எழுதி விட்டு தான் வீட்டை விட்டே புற்படுவேன்’ என்கிறார் அவர்.