நேற்று நடந்த மும்பை- ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டியில் திலக் வர்மா விளாசிய சிக்ஸர் கேமராமேன் தலையை பதம்பார்த்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2022 சீசனில் நேற்று மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் 2வது தோல்வியை சந்தித்தது மும்பை அணி. ஆனால் 19 வயதான திலக் வர்மாவின் ஆட்டம் மும்பைக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கும். 194 ரன்களைத் துரத்திச் செல்லும் போது மும்பைக்காக சிறந்த அரை சதத்தை அடித்து அசத்தினார் திலக் வர்மா.
தத்தளித்த மும்பை பேட்டிங் கப்பலை நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல், சேஸிங்கில் தனது அணியை உயிர்ப்பிக்க விறுவிறுப்பாகவும் அடித்து விளையாடினார். மூன்று பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.அவர் அடித்த சிக்ஸர்களில் ஒன்று கேமராமேன் தலையை பதம்பார்த்தது. 12வது ஓவரில் ரியான் பராக் வீசிய பந்தை லாங்-ஆஃப் திருப்பி அடித்தார் திலக் வர்மா. அந்த பந்து கேமராமேனின் தலையில் பட்டது.
அடி வாங்கியதும் அவர் தலையைப் பிடித்தபடி உட்கார்ந்தார். அவர் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், கேமராமேனை பரிசோதித்து மருத்துவ கவனிப்புக்கான சமிக்ஞையை காட்டினார். சிக்ஸராக வந்த பந்து கேமராமேன் தலையை தாக்கி, அவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்க்க: கேமராமேன் தலையை பதம்பார்த்த திலக் வர்மாவின் சிக்ஸர்